நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள அகஸ்தியர்பட்டி பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (60). இவரது மனைவி சுந்தரி (55). சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்தான் இங்கு வந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுடைய மகள் சுபா வயது (24). பி.காம். சி.ஏ. படித்துள்ளார். இந்நிலையில், சுபா கடந்த 28ஆம் தேதி இரவு தூங்க தனது அறைக்கு வழக்கம்போல் சென்றுள்ளார். பின் மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை சுபாவின் பெற்றோர் சர்ச்சுக்கு சென்றுள்ளனர். அப்போதும் சுபா தனது அறையின் கதவை திறக்கவில்லை. பின் சர்ச்சில் இருந்து வீட்டுக்கு திரும்பிய சுபாவின் பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டிற்கு வந்து பார்த்த அவர்கள் படுக்கையறையில் சுபா உடல் முழுவதும் கருகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் தீயில் பிரிட்ஜ் ஸ்டெபிலைசர், ஸ்விட்ச் போர்டு, சைக்கிள், குடை, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி இருந்தன. இதனை கண்ட அவர்கள் கதறி அழுது துடித்தனர். மேலும், இது குறித்து விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், சுபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சுபா இறந்தது குறித்து வி.கே.புரம் போலீசார் சந்தேகத்தின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, பிரிட்ஜ் மீது இருந்த ஸ்டெபிலைசர் வெடித்து தான் சுபா இறந்துள்ளாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல இச்சம்பவம் நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் தூங்கச் சென்ற இளம்பெண் சுபா காலை தீயில் உடல் கருகி இறந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.