சென்னை வடபழனி தயாளு நகர் மெயின் ரோடு மற்றும் பாரதீஸ்வரர் நகர் 2-வது தெருவில் சாலையோரங்களில் நிறுத்தி வைத்திருந்த 7-க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், அடித்து நொறுக்கியுள்ளார். கார்களை அடித்து உடைக்கும்போது, சத்தம் கேட்டதால் ஓடி வந்த அப்பகுதி மக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மது போதையில் இருந்த அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தஞ்சாவூரை சேர்ந்த பேராசிரியரின் மகனான சாகித்யன் என்பதும் புத்தக கண்காட்சியில் வேலைப்பார்த்ததும் தெரியவந்தது. சாகித்யன் பல வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடும் மன உளைச்சலில் சுற்றியுள்ளார்.
சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள மதுபான கடையில் மது அருந்தியதால் காதலியின் நினைவு வந்ததால், ஆத்திரத்தில் மதுக்கடையில் வம்பு செய்து முதுகு வீங்க அடிவாங்கி உள்ளார். அடி கொடுத்த நபர்கள் சாகித்யனின் செல்போனை பறித்து கொண்டு விரட்டியுள்ளனர். காதலும் போயி.. காதல் தோல்விக்கு ஒரே ஆறுதலாக இருந்த செல்போனும் பறிபோனதால் ஆத்திரமடைந்த சாகித்யன், மதுபோதையில் தெருக்களில் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகளை கண்மூடித்தனமாக கல்லால் அடித்து உடைத்துச் சென்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இப்படி குடிச்சா எந்த பொண்ணுப்பா லவ் பண்ணும்.? என்று எச்சரித்த போலீசார் சாகித்யனை கைது செய்து பின்னர் காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.