சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை அடுத்த லாய்ப்பூர் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் பணிபுரிந்து வந்த பசாந்தி யாதவ் என்ற பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பசாந்தி வெளியே வராததால் இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கோபியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், பசாந்திக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில், கோபியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பசாந்தி அழுகிய நிலையில் கட்டிலில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கோபியை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், பசாந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரிடம் மாட்டி கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் இரண்டு நாட்கள் பசாந்தியின் சடலத்துடன் தூங்கி எழுந்ததாக கோபி தெரிவித்துள்ளார். ஆனால் பிரேத பரிசோதனையின் அறிக்கையின் முடிவில் தான் பசாந்தியின் இறப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும். அதுவரை தொடர் விசாரணை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.