கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஒரு பெண் தன்னிடம் கைவரிசை காட்டிய நபரை சக பயணிகள் முன்னிலையில் அடித்து ஓட வைத்துவிட்டார். மாண்டியா மாவட்டத்தில் கே.ஆர். பேட்டை பேருந்து நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பேருந்தில் இருந்த பெண்ணை ஒருவர் தகாத முறையில் தொட்டுள்ளார். அந்த நபர் பெண்ணை கிண்டல் செய்ததோடு, பேருந்தில் பயணிக்கும் போது தொடர்ந்து தகாத முறையில் தொட்டு சீண்டிக்கொண்டே இருந்துள்ளார். பல முறை எச்சரித்தும், அந்த நபர் பெண்ணிடம் சில்மிஷம் செய்வதை நிறுத்தவில்லை. ஓர் அளவுக்கு மேல் எல்லை மீறிச் சென்ற சீண்டலை பொறுக்க முடியாத இளம்பெண், அந்த நபரின் கன்னத்தில் பளார் என்று ஒன்று விட்டார்.
அத்துடன் இல்லாமல் அவரது கையை முறுக்கிப் பிடித்துக்கொண்டு சரமாரியாக விளாசித் தள்ளினார். இதனை பலரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாலும், ஒருவர்கூட பெண்ணைத் தடுத்து, இளைஞரைக் காப்பாற்ற முன்வரவில்லை. செமத்தியாக டோஸ் வாங்கிய அந்த இளைஞர், அடி தாங்க முடியாமல் அலறி அடித்துக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓடிவிட்டார். இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், அந்தப் பெண் வாலிபரைத் தாக்குவதும், பின்னர் வாலிபர் பஸ்ஸிலிருந்து தப்பியோடுவதையும் காணமுடிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறையில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பட்டப்பகலில் பேருந்தில் வைத்து இளம்பெண்ணிடம் செல்மிஷம் செய்த நபர் வசமாக அடிபட்டு ஓடிய சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.