கள்ளக்காதலால் சகோதரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஓடைப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு வயது 33. மனைவி சந்தனமாரிக்கு 28 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், ராம்குமார் மாடுகள் மூலம் பால் கறந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். தனது பால் பண்ணைக்கு ஆள் தேவை என்பதால், சகோதரர் முறை கொண்ட காளிராஜ் (25) என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளார்.
இந்நிலையில் காளிராஜுக்கும், ராம்குமாரின் மனைவி சந்தனமாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தனமாரி தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளை விட்டு விட்டு ராம்குமாருடன் சென்றுவிட்டார்.
இருவரும் வெளியூரில் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், காளிராஜ் – சந்தனமாரி ஜோடி தங்களது குழந்தையுடன் மீண்டும் ராஜபாளையத்திற்கு வந்துள்ளனர். அப்போது, தன்னுடைய மனைவி திரும்பி வந்திருப்பதை அறிந்த ராம்குமார், தன்னை விட்டு பிரிந்து சென்றதற்கான காரணம் குறித்து கேட்பதற்காக காளிராஜின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த காளிராஜ், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து, ராம்குமாரின் கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, போலீசுக்கு பயந்து அங்கிருந்த தப்பிச்சென்றார் காளிராஜ்.
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜபாளைம் வடக்கு காவல் நிலைய போலீசார், ராம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான காளிராஜை போலீசார் கைது செய்தனர்.