அரூர் அருகே ஆன்லைன் கேம் விளையாடி பணத்தை இழந்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் கிரானைட் கம்பெனியில் பணியாற்றி வந்த இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான முத்தானூரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி அதற்கு அடிமையான இவர், பணத்தையும் இழந்துள்ளார். இதனால், பிரபுக்கு கடன் சுமை அதிகமானதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை விற்பனை செய்துள்ளார்.
இதையடுத்து, நேற்று வழக்கும் போல பணிக்கு சென்ற பிரபு, மீண்டும் கேம் விளையாட ஆரம்பித்துள்ளார். இதில், தன்னிடம் இருந்த ரூ.5000 பணத்தை இழந்ததோடு நண்பரிடம் ஏடிஎம் கார்டை பெற்று மேலும் ரூ.40,000 பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை வீட்டிற்குச் சென்ற பிரபு மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அரூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரும் புகார் அளிக்காததால், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை.