காரைக்காலில் இருசக்கர வாகனத்தில் சாலை தடுப்பை தீ பறக்க இழுத்துச் சென்று கெத்து காட்டிய இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காரைக்கால் நகர் பகுதி மற்றும் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட போலீசாரால் ஆங்காங்கே இரும்பிலான தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் கடற்கரை சாலையில் அவ்வாறு அமைக்கப்பட்டிருந்த ஒரு தடுப்பை இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் இழுத்துச் சென்றுள்ளனர். இரும்பு தடுப்பு தார்சாலையில் உராய்ந்ததில் தீப்பொறி பறந்தது. மேலும், சத்தமாக ஒலி எழுப்பியவாறு சாலையில் பறந்தனர். தங்களின் செயலை கெத்து காட்டுவதற்காக, இளைஞர்கள் இருவரும் நண்பர்கள் மூலம் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்து காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, சாலை தடுப்பை இழுத்துச் சென்று சேதப்படுத்திய இளைஞர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கடற்கரை சாலையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, மீண்டும் அதே 2 இளைஞர்கள், மோட்டார் சைக்கிளில் சாலை தடுப்பை இழுத்துச் செல்ல முயற்சி செய்தனர். இதைக்கண்ட போலீசார் அவர்களை மடக்கியபோது, அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் வேகமெடுத்தனர். விடாது துரத்திச் சென்று அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20), அவரது நண்பர் அப்துல் ரகுமான் (20) என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.