நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் குறைபாடுகள் இருப்பதாகவும் அதன்காரணமாக இந்த மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஹைதராபாத் எம்.பி-யும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒருவழியாக கடந்த 18ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்து, இதற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, நாரி சக்தி வந்தான் ஆதினியம்’ என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் முஸ்லீம் மற்றும் ஓபிசி பெண்களின் ஒதுக்கீடு இடம்பெறவில்லை என்று விமர்சித்தார். ‘நீங்கள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்? சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த மசோதாவில் முஸ்லீம் மற்றும் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு இல்லாதது பெரும் குறையாகத் தெரிகிறது. அதனால்தான் நாங்கள் அதை எதிர்க்கிறோம், ”என்று ஓவைசி தெரிவித்தார்.
குறைந்த பிரதிநிதித்துவ மக்களுக்காக மத்திய அரசு இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை 17 மக்களவை தேர்தல்கள் நடந்துள்ளன. 8,992 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 520 பேர் மட்டுமே முஸ்லீம்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே பெண்கள். 50 சதவீதம் பற்றாக்குறை இருப்பதாக ஓவைசி தெரிவித்தார்.