மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருக்கும் நுகர்வோர், அவற்றிற்கு தங்கள் ஆதார் எண்ணை இணைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மின்சார வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
”தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தெரிவித்துள்ளது. மேலும், அதற்கான பணியையும் தொடங்கியுள்ளது. இதனால், ஆதார் எண்ணை இணைப்பு குறித்து மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு மின்சார வாரியம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. சில மின்நுகர்வோர் ஒரு வீட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பை பெற்றுள்ளனர். மேலும், சிலர் ஒரே பெயரில் நான்கைந்து வாடகை வீடுகளுக்கு மின்இணைப்பை பெற்றுள்ளனர். இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளுக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கலாமா என்ற கேள்வி நுகர்வோர் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், மின்நுகர்வோர் தங்கள் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளுக்கு ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், நுகர்வோருக்கு மின்சார வாரியம் வழங்கிவரும் மானியத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின் இணைப்புகளுக்கும் தனது ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். இதில் பிரச்சனை ஏதும் கிடையாது. அதேபோல, வீடுகளை வாடகைக்கு விடப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம். இதற்கான வசதிகளும் மின்சார வாரிய இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன”. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளன.