தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. கட்டண உயர்வு எவ்வளவு வரை உயர்த்தப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு குழப்பமாகவே உள்ளது. அந்த வகையில் யார் யாருக்கு எவ்வளவு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம். 100 யூனிட் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின் நுகர்வோர் தமிழகத்தில் ஒரு கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு எவ்வித கட்டண உயர்வும் இன்றி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர் 63,35,000 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ரூ.27.50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர் 37 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ரூ.72.50 பைசா மட்டுமே மின் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர் தமிழ்நாட்டில் 18 லட்சத்து 82 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ரூ.147.50 பைசா மின் கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.