யூடியூப் தளம் பிரபலமானதை அடுத்து சூப்பர் பைக் மோகம் இளைஞர்கள் மத்தியில் தலைவிரித்தாடுகிறது. ஒரு கார் வாங்கும் விலையில் பைக் விற்கப்பட்டாலும், கடன் வாங்கியாவது சூப்பர் பைக்குகளை வாங்கி வீடியோ வெளியிட்டு திருப்தி அடைகிறார்கள் சில இளைஞர்கள். ரூ.10 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையிலான இந்த பைக்குகளில் வீலிங் செய்யவில்லை என்றால் தெய்வக்குத்தமாகி விடும் என்கிற ரீதியில் சாகச வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் நிறைந்து கிடக்கின்றன.
அந்த வகையில், ஏற்கனவே பல சாகச வழக்குகளில் சிக்கி சிறை சென்ற மும்பை இளைஞர் ஒருவர் தற்போது வித்தியாசமான முறையில் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பயாஸ் காத்ரி என்ற அந்த இளைஞர் வெறுமனே வீலிங் செய்வதில் விரக்தியடைந்தாரோ என்னவோ, 2 பெண்களை வைத்து சாலை நடுவே சர்க்கஸ் காட்டியுள்ளார். தனது விலையுயர்ந்த பைக்கில் முன்புறம் ஒரு பெண்ணையும், தனக்கு பின்புறம் மற்றொரு பெண்ணையும் அமர வைத்து வீலிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால் 3 பேருமே ஹெல்மெட் அணியவில்லை என்பதுதான்.
விபத்தில் சிக்காமல் மூவரும் செய்த பைக் சாகசத்தை பார்த்த போலீசார், கண்களுக்கு பைக்கின் நம்பர் பிளேட் தெளிவாகத் தெரிந்துள்ளது. அதை வைத்து சம்பந்தப்பட்ட இளைஞர் தங்கியிருந்த ஆன்டோப் ஹில் குடியிருப்புக்கு போலீசார் விரைந்தனர். வீலிங் சாகசம் செய்து களைப்பாக வீல்சேரில் படுத்திருந்த இளைஞரை அலுங்காமல் கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். அவர் மீதும் அவருடன் பைக்கில் பயணம் செய்த இரு பெண்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 308ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.