’திமுக தலைவர் கூட நினைத்தால் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிடலாம்’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள தனியார் மஹாலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நடுறை மாவட்டம் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய டிடிவி தினகரன், “மதுரைக்காரர்களின் உள்ளம் பெரியது. ஆட்சி அதிகாரத்தை விரும்பி இருந்தால் நீங்கள் எடப்பாடி பின்னால் நின்று இருக்கலாம். பணத்தை தண்ணீராக செலவு செய்கிறார்கள். வீட்டிலிருந்து கொண்டு வந்த பணமல்ல. எல்லாம் மக்களின் வரிப்பணம். தலைமை பதவிக்காக குடுமிப்பிடி சண்டை நடைபெறுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் அவர்களின் ஆட்சியால் தற்போது தினமும் ஒரு வழக்கை சந்தித்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தியதால், அந்தப் பணமும்
அவர்களுக்கு உதவப் போவதில்லை.
திமுக தலைவர் கூட நினைத்தால் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிடலாம். தஞ்சையில் உள்ள அமமுக பகுதிச் செயலாளரை விலைக்கு வாங்க முற்படுகிறார்கள். நான் நினைத்திருந்தால் 5 ஆண்டுகளுக்கு முன்பாக அதிமுகவில் பொறுப்பு வாங்கி இருக்க முடியும். ஆனால், அப்போது அவர்கள் போகிற போக்கு சரியில்லை என்பதால் தான் அவர்களை கண்டித்தேன். ஆர்கே நகர் தொகுதியில் நான் போட்டியிடும் எண்ணமே எனக்கு இல்லை. ஆனால், சிறைச்சாலையில் சசிகலாவை சந்திக்க சென்றபோது ஒரு சிலரின் பெயரை கூறினேன். அப்போது, நீங்கள் நிக்கவில்லையா என்று அவர் கேட்டார். அதன் பிறகு தான் நான் போட்டியிட்டேன். ஊழலில் ஈடுபடாதீர்கள் என்று அன்று எச்சரித்தேன். அதைக் கேட்கவில்லை அதனால் இன்று தொடர்ந்து ரெய்டு நடைபெறுகிறது.
காக்கி சட்டையை கண்டாலே ஓடி ஒளிந்தவர்கள், மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டுவரும் தகுதி அவர்களிடம் இல்லை என்று உங்களுக்கு தெரியும். இனி அவர்கள் பணம் கொடுத்தாலும் வேலை செய்யாது. நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது. நம்பிக்கை துரோகிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அவர்கள் காலத்திலேயே பதில் சொல்ல நேரம் வந்துவிட்டது. இந்த சண்டையில் நாம் தலையிட வேண்டாம். டிடிவி-யின் சின்னம் குக்கர் என்பதை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்ல வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும் என்பது தான் எனது யூகம். ஒன்றிய அளவில் சரியான நிர்வாகிகளை அணிவாரியாக நியமனம் செய்யுங்கள்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ளது. யாருக்காகவும் பின்வாங்க போவதில்லை. யாரோடும் சமரசம் செய்வதில்லை. அம்மாவின் ஆட்சியை அமமுக தலைமையில் கொண்டு வருவேன். தொண்டர்களை மட்டுமே நம்பி கழகத்தை நடத்தி வருகிறேன். சரியான நிர்வாகிகளின் நியமிக்க வேண்டும். நானே நேரில் ஆய்வு செய்வேன். நாம் போர்க்களத்தில் இருப்பதால் தனிமனித மரியாதையை எதிர்பார்க்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் அதற்காக அரும்பாடு பட வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.