சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், அதனால் எந்தெந்த பகுதிகளில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மதிப்பில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றன என்பது குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் 2,624 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்களையும், 53 கிலோ மீட்டர் நீளத்திற்கு 33 நீர்வழிக் கால்வாய்களையும் சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது. கடந்த 2021 பருவமழையின் போது, சென்னை நகரில் மழைநீர் தேங்கியதால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதன்பின், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், உலக வங்கி நிதி மூலம் ரூ.120 கோடி மதிப்பீட்டில், 48 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு 26 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதனால் டாக்டர் பெசன்ட் சாலை, நடேசன் சாலை, திருவல்லிக்கேணி பஜார் சாலை, இளங்கோ நகர், காமராஜர் சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, ஸ்ரீராம் காலனி மற்றும் சிவப்பிரகாசம் சாலைகளில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் இருந்து 255 கோடி ரூபாய் மதிப்பில், புளியந்தோப்பு, கொளத்தூர், ஜி.என்.செட்டி சாலை, ராஜமன்னார் சாலை, அசோக் நகர், சர்மா நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரண நிதியின் கீழ் 291 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில், எம்.கே.பி., நகர், வினோபா நகர், பிரதான சாலை, ஹபிபுல்லா சாலைகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் ரூ.232 கோடி மதிப்பில், சென்னையில் 4, 5, 6, 7, 8, 9, 10 ஆகிய மண்டலங்கள் மற்றும் மூலதன நிதியில் இருந்து இளையா தெரு, ஸ்டீபன்சன் சாலை, ஜி.கே.எம். காலனி ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேற்கண்ட பணிகள் காரணமாக கடந்த ஆண்டை விட குறைந்த எண்ணிக்கையிலான இடங்களில் மட்டுமே மழைநீர் தேக்கம் இருந்தது. அந்த இடங்களில் சில மணி நேரத்தில் மழைநீர் அகற்றப்பட்டுவிட்டதாகவும் மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. ரூ.120 கோடி மதிப்பில் அடையாறு, கூவம் வடிநிலப் பகுதிகளில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளால், அம்பத்தூர், வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் பகுதி மக்கள் பயனடைந்துள்ளனர். இதேபோன்று, கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதியில் மூவாயிரத்து 220 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 68 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இவை முழுமைபெறும் போது திருவொற்றியூர், மணலி, மாதவரம் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும் எனவும் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.