தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மையங்கள் செயல்படும். இந்த நிலையில் நாளை ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடவுள்ளனர். பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், சினிமா அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.