இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகிய யாருமே அதிமுகவை வழிநடத்த தகுதியானவர்கள் இல்லை என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுகவில் இருந்த மூத்த நிர்வாகிகள் தனித்தனியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி அணியும், 10.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம், 11 மணிக்கு டிடிவி தினகரன், 11.30 மணிக்கு சசிகலாவும் தனித்தனியாக மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வசிக்கும் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் படி முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர் சசிகலா தான். ஜெயலலிதாவை போன்று அதிமுகவை வழிநடத்த தலைவர்கள் இல்லை. ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக, சரியாக செயல்படவில்லை. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகிய யாருமே அதிமுகவை வழிநடத்த தகுதியானவர்கள் இல்லை. பதவியை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அதிமுக தலைவர்கள் உள்ளனர். அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது. ஒட்டுமொத்த அரசியல் வாழ்வும் பிடிக்காததால் அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை. அதன் காரணமாகத்தான் விலகி இருக்கிறேன்” என கூறினார்.