ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், வருமான வரித் தாக்கல் செய்ய தேவையான முக்கிய ஆவணங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வருமான வரிச் சட்டம் 1961, பல்வேறு சூழ்நிலைகளின் கீழ் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதை கட்டாயமாக்குகிறது, மேலும் தேவைகளைப் பின்பற்றுவது தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் முக்கியமானது. ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், வரி செலுத்துவோர் சுமூகமான மற்றும் துல்லியமான சமர்ப்பிப்பை உறுதிசெய்ய தேவையான தயாரிப்புகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தனிப்பட்ட வரி செலுத்துவோர் மற்றும் தணிக்கை தேவையில்லாதவர்களுக்கு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2023 ஆகும்.
வருமான வரித் தாக்கல் செய்யும்போது சில முக்கிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம், வருமான வரித் தாக்கல் செய்வோர் வீண் தாமதத்தையும், சிக்கல்களையும் தவிர்க்கலாம். வருமான வரித் தாக்கல் செய்ய தேவையான முக்கிய ஆவணங்களை பார்க்கலாம். படிவம் 16ஊதியதாரர்கள் (Salaried) வருமான வரித் தாக்கல் செய்வதற்கு தேவையான வருமான வரி படிவம்தான் படிவம் 16 (Form 16). இந்த படிவத்தில் சம்பளம், வரி விலக்கு உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். வட்டி சான்றிதழ்வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு, நிலையான வைப்பு நிதி (FD), தொடர் வைப்பு நிதி (RD) ஆகியவற்றின் வாயிலாக கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி உண்டு. ஆக, இத்திட்டங்களுக்கான வட்டி சான்றிதழ்கள் தேவை.
டிடிஎஸ் சான்றிதழ்ஊதியதாரர்கள் தங்களுக்கான டிடிஎஸ் (TDS) சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டுக்கு 40,000 ரூபாய்க்கு மேல் (சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.50,000 மேல்) வட்டி வருமானம் பெற்றால் அதற்கு வங்கி சார்பில் டிடிஎஸ் வசூலிக்கப்படும். இதற்கான டிடிஎஸ் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு தகவல் அறிக்கை2021ஆம் ஆண்டில் ஆண்டு தகவல் அறிக்கையை (Annual Information Statement) வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியது. இந்த அறிக்கையில், ஒரு நபர் அந்தாண்டில் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனைகள் குறித்த அனைத்து விவரங்களும் இருக்கும்.
இதை பதிவிறக்கம் செய்து, சரிபார்க்க வேண்டும். வரி சேமிப்புவருமான வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் அதற்கு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். பழைய வருமான வரி முறைக்கு மட்டுமே இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் எண் வருமான வரிச் சட்டத்தின்படி, ஒவ்வொரு நபரும் தனது வருமான வரி அறிக்கையில் ஆதார் எண் குறிப்பிட வேண்டும். எனவே, ஆதார் கார்டு தயாராக வைத்துக்கொள்ளவும். வங்கி கணக்குஉங்களிடம் இருக்கும் வங்கி கணக்குகளின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிதி ஆண்டில் ஏதேனும் வங்கி கணக்கை நீங்கள் மூடியிருந்தால் அதற்கான விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.