2026ஆம் ஆண்டு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஓரணியில் நின்று ஆட்சி அமைக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1999ஆம் ஆண்டு மூப்பனார் தலைமையில் கூட்டணி அமைந்த போது ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று இருந்தால் தங்களுடைய கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என்று தலைவர்களும், தொண்டர்களும் நினைப்பது தவறு கிடையாது.
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு எப்படி வர வேண்டும் என்றால் நல்ல கூட்டணி, ஒத்த கருத்துடைய கூட்டணி, கூட்டணியின் பலம், மக்களின் நம்பிக்கை, வெற்றி வாய்ப்பு, சட்டமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை ஆகியவற்றை சார்ந்தே கூட்டணி அரசின் வாதமாக வரும் நாட்களில் இருக்கப் போகின்றது.
2026ஆம் ஆண்டு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஓரணியில் நின்று ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் எந்தெந்த கட்சியோடு கூட்டணி என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.