பிஸ்கட், உடனடி நூடுல்ஸ் மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட 43 பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ‘பாவ வரி’ விதிக்க வேண்டும் என பொதுநலனுக்கான ஊட்டச்சத்து ஆலோசனை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”உடனடி நூடுல்ஸ், ஐஸ்கிரீம்கள், பழச்சாறுகள், பேக்கரி பொருட்கள், சாக்லேட்டுகள் மற்றும் பீட்சாக்கள் உள்ளிட்ட 43 உணவுப் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், 31 உணவுப் பொருட்களில் சர்க்கரை அளவும், 29 பொருட்களில் நிறை கொழுப்பும், 19 பொருட்களில் சோடியம் அளவும் அதிகமாக இருந்தன.
மேலும், 8 பொருட்களில் இவை மூன்றுமே அதிகமாக இருந்தன. எனவே, இந்த பொருட்கள் அனைத்திற்குமே மது மற்றும் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்படுவதை போல பாவ வரி விதிக்க ஜி.எஸ்.டி., கவுன்சில் முன்வர வேண்டும்“ என்று பொதுநலனுக்கான ஊட்டச்சத்து ஆலோசனை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.