தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் ஆவண எழுத்தர்கள் நுழைய கூடாது’ என, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது; பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு, அலுவல் நிமித்தமாக சார் – பதிவாளர் அழைக்காத நிலையில், ஆவண எழுத்தர்கள் யாரும், சார் – பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது. சார் – பதிவாளர்கள் இதை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். இந்த உத்தரவுக்கு மாறாக, ஆவண எழுத்தர்கள் நடமாட்டம் இருந்தால், சட்ட விதிகளின்படி எழுத்தர்கள் மீது உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் கண்காணிக்க தவறும் சார் – பதிவாளர்கள் மீது, கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுத் துறை, DIG, மாவட்ட பதிவாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது, சார் – பதிவாளர் அலுவலகங்களில் ஆவண எழுத்தர்கள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த பிரச்சனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.