கோவை மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் மூதாட்டிகள் ஆய்ஷம்மாள் (75), வசந்தா (75). சமீபத்தில் இவர்களிடம் இருந்து 11 சவரன் நகையை மர்ம நபர்கள் அபகரித்து சென்றுவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட இரண்டு மூதாட்டிகளும், போலீசில் புகார் அளித்த நிலையில், உக்கடம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 பெண்கள் சுற்றித்திரிவதை பார்த்து அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், இருவருமே திருட்டு தொழில் செய்பவர்கள் என்றும் 2 பாட்டிகளிடம் நகையை கொள்ளையடித்ததும் இவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. பின்னர், அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர்களது பெயர் நந்தினி (28), காளிஸ்வரி (28) என்பதும், இருவருமே தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நந்தினி, காளிஸ்வரி இருவருமே அண்ணன், தம்பியை திருமணம் செய்துள்ளனர்.
இவர்களுக்கு திருட்டு தான் குடும்ப தொழிலாக இருந்துள்ளது. இதில், காளிஸ்வரி தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து 12 வயதிலேயே திருட ஆரம்பித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு, கணவரின் அண்ணியான நந்தினியை தன்னுடன் சேர்த்து கொண்டு திருட்டை தொடர்ந்துள்ளார். நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குடும்பத்தினருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகைகளை பறித்து வந்துள்ளனர்.
நகையை திருடிய உடனேயே அதை விற்று காசாக்கிவிடுவார்கள். இப்படி திருடி திருடியே 2 பெண்களும் தூத்துக்குடியில் பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். தங்களது பிள்ளைகளையும் பெரிய கான்வென்ட்டில் படிக்க வைத்து வருகின்றனர். இதைத்தவிர, பல இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். திருடச் செல்லும் பகுதியில் டென்ட் அமைத்து விடுவார்களாம்.
அப்படித்தான், கோவையில் பேரூர் மற்றும் கோனியம்மன் கோயில் திருவிழா நடைபெறவிருப்பதை தெரிந்து, முன்கூட்டியே துடியலூரில் டென்ட் அமைத்து தங்கியுள்ளனர். அப்போதுதான், 2 மூதாட்டிகளிடமும் நகையை பறித்துள்ளனர். தற்போது அந்த நகைகள் மீட்கப்பட்ட நிலையில், இரண்டு பெண்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.