தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில், பல அரசு பள்ளிகள் தலைமை ஆசிரியர் இல்லாததால் பல்வேறு சிக்கல்களை சந்தித்துவருகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் விரைவில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட இருக்கின்றன. இந்த கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான முதுகலை ஆசிரியர்கள் பெயர்களை தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்காக பரிந்துரைக்கக்கூடாது, மேலும் 17 A, 17 B போன்ற பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்கள், மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் தண்டனை பெற்று, தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் தலைமை ஆசிரியர் பதவிக்கு பரிந்துரைக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எந்த புகார் மற்றும் குற்ற வழக்குகள் எதுவும் இல்லாதவர்களின் பெயர்களை மட்டுமே தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்காக பரிந்துரைக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், விரைவில் பணியில் அமர்த்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.