தமிழ்நாடு முழுவதும் மொத்தம் உள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவுகளாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில், கடந்த 2023ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதாவது, சேலம், உளுந்தூர்பேட்டை, திண்டுக்கல், திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை – அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர ரூ.85 ஆக இருந்தது. அது தற்போது, ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், இரு முறை சென்று வர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூபாய் 2,505 இல் இருந்து 2,740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 160 ரூபாயாகவும், இரு முறை சென்று வர 240 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் 4,800 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வர ரூ.320 ஆகவும், இரு முறை சென்று வர ரூ.480ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.9,595 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஒருமுறை சென்று வர கட்டணம் 45 ரூபாய் வரையும், இருமுறை செல்ல 65 ரூபாய் வரையும், மாதாந்திர கட்டணம் ரூ.1,325 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண நிர்ணயம் அனைத்தும் பாஸ் டேக் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். பாஸ் டேக் இல்லாத வாகனங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமையல் சிலிண்டர் விலை 200 ரூபாய் வரை மத்திய அரசு குறைத்துள்ளதால், மக்கள் சற்று நிம்மதியில் இருந்தனர். ஆனால், தற்போது சுங்கக்கட்டணம் அதிரடியாக உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.