அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டது பற்றி சீமான் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர். முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரையும் அழைத்தனர்.
அம்பேத்கர் புத்தகத்தை திருமாவளவன் வெளியிட்டு நான் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். எனக்கு அம்பேத்கர் பற்றி பேச யாரும் மேடை அமைத்துத் தர வேண்டியதில்லை. தம்பி விஜய், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதை வரவேற்கிறேன். அம்பேத்கரை மக்கள் மத்தியில் யார் கொண்டு சேர்த்தாலும் மகிழ்ச்சி தான்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு ஐபிஎஸ் அதிகாரி செய்கிற தவறால் ஆயிரக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அதை இந்த அதிகாரம் ரசிக்கிறது. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோதும், அதற்கு முன்பும் இதுபோன்று நடந்துள்ளதா? அதை எதிர்கொள்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.