மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கவுதமாலாவில் பேருந்து ஒன்று பாதுகாப்பு சுவற்றின் மீது மோதி பாலத்தில் இருந்து கழிவுநீரால் மாசுபட்ட ஆற்றில் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்தனர். இந்த சாலை விபத்து மிக மோசமான சாலை விபத்துகளில் ஒன்றாகும் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் இடிபாடுகளில் இருந்து 51 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் குழுவின் செய்தித் தொடர்பாளர் விக்டர் கோம்ஸ் கூறுகையில், ”தற்காலிக பிணவறையில் 51 உடல்கள் உள்ளன. மீட்புப் பணியாளர்கள் ஏற்கனவே இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்”.
விபத்து நடந்தது எப்படி..?
“பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு உலோகத் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு, 65 அடி ஆழமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் விழுந்தது. அதேநேரம், தீயணைப்புத் துறையினர் கூறுகையில், ‘பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, பல சிறிய வாகனங்களின் மீது மோதிய பின்னரே தடுப்புச் சுவற்றில் இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது’ என தெரிவித்துள்ளனர்.
தேசிய துக்கம் அனுசரிப்பு :
இந்த துயரச் சம்பவத்திற்கு கவுதமாலா அதிபர் பெர்னார்டோ அரேவலோ வருத்தம் தெரிவித்து தேசிய துக்கக் காலத்தை அறிவித்தார். மேலும், இன்று கவுதமாலா தேசத்திற்கு ஒரு கடினமான நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார். குப்பைகளால் நிரப்பப்பட்ட சேற்று நீரில் இருந்து எடுக்கப்பட்ட உடல்களை, ஸ்ட்ரெச்சர்களில் சாய்வில் கடந்து செல்லும் தீயணைப்பு வீரர்களின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.