ஒட்டுமொத்த உலகிலும் தொழிற்சாலைகள் பெருக்கம், காடுகளை அழித்தல், நீர் நிலைகளை அழித்தல் போன்ற காரணங்களால் பூமி இயல்பை விட வேகமாக வெப்பமடைகிறது.. இதனால் பனிப்பாறைகள் நாம் முன்பு கணித்ததை விட அதிகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.. இதன் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதுடன், கடற்கரையோர நகரங்கள் நீரில் மூழ்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் தான் மற்றொரு எச்சரிக்கை மணியாக அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிப்பாறையாக கருதப்படும், Doomsday Glacier என்று அழைக்கப்படும் த்வைட்ஸ் (Thwaites) பனிப்பாறை அழிவின் விளிம்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஏறக்குறைய குஜராத் மாநிலத்தின் அளவில் இருக்கும் பனிப்பாறை உருகி வருவதால், உலக கடல் மட்டத்தில் பேரழிவு தரும் உயர்வை ஏற்படுத்தக்கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நேச்சர் இதழில் இதுகுறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட, பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஆராய்ச்சியாளர்கள், த்வைட்ஸ் பனிப்பாறை உருகுவதால், ஆண்டுக்கு 43 மீட்டர் என்ற விகிதத்தில் புதிய பள்ளத்தாக்குகளை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளனர்…
1992 முதல் 2011 வரையிலான செயற்கைக்கோள் ரேடார் அளவீடுகளின் அடிப்படையில் த்வைட்ஸ் பனிப்பாறை உட்பட 6 பனிப்பாறைகள், அண்டார்டிகாவை சுற்றியுள்ள கடல் நீரின் வெப்பமயமாதலால் வேகமாகி உருகி, அமுண்ட்சென் கடலில் பாய்கின்றன. ஒவ்வொரு ஆண்டும், இந்த பனிப்பாறைகளால் பில்லியன்கணக்கான டன் பனிக்கட்டிகளை கடலில் கலக்கப்படுகிறது. இது வருடாந்திர கடல் மட்ட அதிகரிப்பில் சுமார் 4% ஆகும்.
த்வைட்ஸ் பனிப்பாறை முழுமையாக உருகினால் என்னாகும்..? த்வைட்ஸ் பனிப்பாறை மொத்தமாக உருகினால், கடல் மட்டம் இரண்டு அடிக்கு அதாவது 70 சென்டிமீட்டர் உயரும்.. இது உலகெங்கிலும் உள்ள கடலோர நகரங்களை பேரழிவிற்கு உட்படுத்தலாம் என்று கருதப்படுகிறது…. மேலும், த்வைட்ஸ் பனிப்பாறை, மேற்கு அண்டார்டிகாவில் சுற்றியுள்ள பனிக்கட்டிகளுக்கு இயற்கையான அணையாகவும் செயல்படுகிறது. எனவே த்வைட்ஸ் பனிப்பாறை உருகினால், உலகளாவிய கடல் மட்டம் சுமார் 10 அடி உயரும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இதற்கு நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம் என்றாலும், அதை அலட்சியமாக எடுத்துகொள்ள கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்..
இது நம்மை எவ்வாறு பாதிக்கலாம்? புவி வெப்பமடைவலால் கடல் மட்டம் உருகுவதும் உயருவதும் 2030-ல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030களின் நடுப்பகுதியில், அமெரிக்காவில் உள்ள அனைத்து கடல்களிலும், கடல் அலை கணிசமாக உயரும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பனிப்பாறைகள்/பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் ஏற்படும் உடனடி பக்க விளைவுகளுக்கு மிகப்பெரிய உதாரணமாக, துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய மூன்று பெரிய பூகம்பங்கள் மற்றும் தொடர்ச்சியான பின்அதிர்வுகளை சொல்லலாம்.. ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற இந்த நிலநடுக்கத்திற்கு, துருக்கியின் அக்ரி மலையில், அராரத் பனிப்பாறைகள் உருகுவது முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.. பனிப்பாறை உருகுவதற்கும் நிலநடுக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று நினைக்கலாம்.. பனிப்பாறைகள் உருகும்போது, டெக்டோனிக் தகடுகளில் அவற்றின் சுமை குறைந்து, நிலநடுக்கங்களை உண்டாக்க போதுமான உராய்வுகள் ஏற்படுகிறது..
இந்தியாவுக்கு என்ன ஆபத்து..? சரி.. அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிபாறை உருகும் செய்தியை பாரத்து, சுமார் 11,835 கிமீ தொலைவில் உள்ள இந்தியாவிற்கு என்ன பாதிப்பு என்று நினைக்கலாம்.. ஆனால் புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதுமே ஆபத்தில் உள்ளது என்பதே கசப்பான உண்மை… எனவே இந்த பனிபாறை உருகுவது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்..
உலக வானிலை அமைப்பு, உலக வானிலை குறித்து கடந்த ஆண்டு நடத்திய ‘State of the Global Climate in 2021 என்ற ஆய்வில், இந்திய கடற்கரையோரங்களில் கடல் மட்டம் உலக சராசரியை விட கணிசமாக உயர்ந்து வருகிறது என்பது தெரியவந்துள்ளது.. குறிப்பாக இந்தியாவின் தென்மேற்குப் கடலோர பகுதிகளில் உலக சராசரியை விட ஆண்டுக்கு 2.5 மிமீ என்ற அளவில் கடல்நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.. காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (IPCC), கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், “2040 ஆம் ஆண்டில், மும்பையின் கடல் மட்டம் 0.12 மீ உயரும் என்றும், சென்னையின் கடல் மட்டம் 0.10 மீ உயரும் என்றும் கணித்திருந்தது..
மும்பை, சென்னை, கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் உட்பட பல கடலோர நகரங்கள் இந்த நூற்றாண்டின் இறுதியில் கிட்டத்தட்ட 3 அடிக்கு அடியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் மட்டம் அதிகரிப்பதால், கடந்த 20 ஆண்டுகளாக சுந்தரவனக் காடுகள், 110 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலங்களை இழந்தது என்பதே மற்றொரு கவலைக்குரிய விஷயமாக உள்ளது..
இமயமலை பனிப்பாறைகள் உருகுவதால், இம்ஜா ஏரி போன்ற பனிப்பாறை ஏரிகள் உருவாகி வருகின்றன.. இவை அதிகமாக உருகும் நிலையில், பனிப்பாறைகள் எந்த நேரத்திலும் உடைந்து, பேரழிவு தரும் ‘பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தை’ ஏற்படுத்தும் என்பதால், வட இந்தியாவின் நிலை மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. உலக சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவு குறைப்பதே தங்கள் நோக்கம் உலகின் முக்கிய நாடுகளும், தலைவர்களும் உறுதிமொழி எடுத்துள்ளனர்.. ஆனால் அவை வெறும் வாக்குறுதிகளாக மட்டுமே உள்ளது… அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது அனைத்து நாடுகளும் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே பூமியை மிகப்பெரிய பேரழிவில் இருந்து காக்க முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மை..