சியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சியாமா பிரசாத் மூக்கரஜியின் 123-வது பிறந்தநாள் நிகழ்வு கோவையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ரைஸ் ஆப் நியூ இந்தியா” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அறப்போர் இயக்கம் மின்சார துறையில் நடந்திருக்கும் ஊழலை வெளிக்கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளேன். இந்த குற்றச்சாட்டு உண்மையே. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. ஏற்கனவே, டிவிஏசி-யில் பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட புகார்கள் விசாரிக்கப்படாமல் இருக்கின்றன. அறப்போர் இயக்கம் கொடுத்துள்ள புகாரும் இப்படி தானா? இதையாவது முதல்வர் பார்பாரா? இல்லை செந்தில் பாலாஜி தானே.. நமக்கு வேண்டபட்டவர் என்று விட்டு விடுவாரா..?
ஆர்.எஸ் பாரதி, ஏதோ என்னை பிரியாணி போட்டு விடுவதாக சொல்கிறார். அவரின் வயதிற்கும், பேச்சிற்கும் சம்மந்தமே இல்லை. இதெல்லாம் அருவா பிடிச்ச கை.. அருவா யார் பிடித்தாலும் வெட்ட தான் செய்யும்… அதுவும் ஒரு விவசாயி பிடித்தால் நல்லாவே வெட்டும். தமிழகத்தில் பயம் காட்டி அரசியல் செய்வதெல்லாம் என்னிடம் நடக்காது. அவர் (ஆர்.எஸ் பாரதி) என்னதான் தலைகீழாக நின்று தோப்புக்கர்ணம் போட்டாலும், 2024 தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி.” என்றார்.
பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த நிகழ்வில், நான் ஒரு விருந்தினராக தான் கலந்து கொண்டேன். நான் யாரையும் போட்டியாக எடுத்துக் கொள்ளவில்லை. யார் யாரை போட்டியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று மக்கள் முடிவு செய்யட்டும். ஆரோக்கியமான அரசியல் செய்வதே எனது விருப்பம். எத்தனையோ மாற்றுக் கட்சியினரின் நிகழ்விற்கு செல்கிறோம், அங்கேயே சாப்பிடுகிறோம்.. இப்படி ஒவ்வொருவராக சஸ்பண்ட் செய்தால் எங்கே போய் முடியும் தமிழக அரசியல் சூழல்.. மாற்றுக் கட்சியின் முடிவுகளில் தலையிடும் அதிகாரம் எனக்கு இல்லை.” என்றார்.