இலங்கை நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை வேத்தலாவ எனும் கிராமத்தில் நிலத்தின் கீழ் இருந்து நீர் செல்வது போன்ற பல்வேறு விதமான அமானுஷ்யமான மர்ம சத்தம் கேட்பதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த கிராமமானது மலைகள் அற்ற ஒரு சமவெளிப் பகுதியில் கொத்மலை நீர்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்த நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அங்கு நிலத்துக்கு கீழ் இருந்து பல்வேறு சத்தங்கள் கேட்பதாக தொடர்ச்சியாக புகார்கள் கிடைக்கப் பெற்றதாகவும், அதன் அடிப்படையிலேயே அக்கிராம மக்களை பாதுகாப்பான இடங்களில் இரவு வேளையில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலைமையானது, அச்சப்படுவதற்கான காரணியாக இதுவரை அடையாளம் எதுவும் காணப்படவில்லை எனவும், எனினும் நுவரெலியா மாவட்ட கட்டிடம் மற்றும் நிலம் ஆய்வு மைய அதிகாரிகளின் உதவியோடு குறித்த கிராமம் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்க நடவடிக்க எடுக்கப்படவுள்ளதாகவும் இந்நிலைமை தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.