’லியோ’ ட்ரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வசனம் பெரிய விஷயமல்ல. சர்ச்சைக்குரிய வசனங்களைப் பயன்படுத்தும் நிலையில் சினிமா உள்ளது என சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், அதில் ஆபாச வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்து மக்கள் முன்னணி ‘லியோ’ படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
‘லியோ’ படத்தின் ட்ரெய்லருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’லியோ திரைப்படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ஆபாச வசனம் எல்லாம் பெரிய விஷயமே கிடையாது. இன்றைக்கு இம்மாதிரியான வசனங்கள் வைக்கும் அளவிற்கு சினிமாவின் நிலை மாறியுள்ளது. ‘லியோ’ ட்ரைலரில் இடம்பெற்ற வசனத்தை தணிக்கைக்குழு நீக்கி இருக்க வேண்டும் அல்லது அந்த இடத்தில் ஒலியை அமைதிப்படுத்திருக்க வேண்டும்’ என்றார்.