சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை காவல்துறை வெளியிட்டுள்ளது.
அதில், ராஜ்பவன் மெயின்கேட் அருகே காவலர்கள் பாதுகாப்பு அலுவலில் இருந்த போது, கருக்கா வினோத் என்பவர் நுழைவு வாயில் எண் 1-ன் எதிர்புறம் நின்றவாறு 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீப்பற்ற வைத்து வீசியதாக கூறப்பட்டுள்ளது. முதல் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் நுழைவு வாயிலின் முன் விழுந்த நிலையில், உடனடியாக வினோத்தை பிடிப்பதற்காக காவலர்கள் ஓடினர்.
அந்த நேரத்தில் மற்றொரு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை தீப்பற்ற வைத்து மீண்டும் காவலர்களை நோக்கி வினோத் வீசியுள்ளார். மேலும், அங்கிருந்த சில காவலர்கள் சிலர் வினோத்தை மடக்கி பிடிக்க முற்பட்டபோது, ‘என்னை பிடிக்க வந்தீங்களா.. உங்க மேலேயும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிவிடுவேன்’ என்று அவர் மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைமைக் காவலர் மோகன் அளித்துள்ள புகாரின் பேரில் 5 பிரிவுகளின்கீழ் வினோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது சொத்தை சேதப்படுத்தியதற்காகவும், அதை தடுக்க வந்த காவலர்களை பணி செய்யவிடாமல் மிரட்டியதற்காகவும் வினோத் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல் தகவல் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”ஆளுநர் மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு புகார் செய்யப்பட்டுள்ளது. இதனால் தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது. பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்த போலீசாரின் விசாரணையில் அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே இது தொடர்பான விரிவான விசாரணை முடித்து வைக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.