கும்பமேளாவில் கங்கை நீரில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கழிவு அதிகளவு இருப்பதால், குளிப்பதற்கு உகந்தது அல்ல என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 26ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மகா கும்பமேளாவின் போது, நதி நீரில் புனித நீராடுவதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்தவகையில், ஜனவரி 13ஆம் தேதி முதல் நதியில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 54.31 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், மகா கும்பமேளாவின் போது பல்வேறு இடங்களில் உள்ள நதி நீரில் மல கோலிஃபார்ம் அளவுகள் அதிகளவில் இருப்பதால், குளிப்பதற்கு கூட இந்த நீர் தகுதியற்றதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. பிரயாக்ராஜில் கங்கை நீரில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளில் இருந்து வரும் கிருமிகள் அதிகளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலிஃபார்ம் என்பது மனிதர்கள் உட்பட விலங்குகளின் செரிமானப் பாதையில் உருவாகும் பாக்டீரியா ஆகும்.
தண்ணீரில் கழிவுநீர் மாசுபடுவதைக் குறிக்கும் ஒரு குறிகாட்டியாக மல கோலிஃபார்ம் உள்ளது. அதாவது, 100 மில்லி தண்ணீருக்கு அதிகபட்சமாக 2,500 யூனிட் மலக் கோலிஃபார்ம் இருக்கலாம். ஆனால், இங்கு பல இடங்களில் இந்த வரம்பை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் கண்காணிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மல கோலிஃபார்ம் தொடர்பாக குளிப்பதற்கான முதன்மை நீரின் தரத்திற்கு நதி நீரின் தரம் ஒத்துப்போகவில்லை. புனிதமான நீராடும் நாட்கள் உட்பட பிரயாக்ராஜில் ஏராளமான மக்கள் ஆற்றில் குளிப்பதால், இது இறுதியில் மல செறிவு அதிகரிக்க வழிவகுக்கிறது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனால், திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடும் தண்ணீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை அறிக்கை சமர்பித்துள்ளது. இதனைப் பதிவு செய்து கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், இந்த அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்கும்படி உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கங்கை நீரின் தரத்தை உறுதி செய்ய ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறிய தீர்ப்பாயம், இது தொடர்பாக காணொளி காட்சியில் ஆஜராகி விளக்கமளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.