நடிகர் மன்சூர் அலிகான் தனது கட்சியின் பெயரை ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் அவர், “தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் நான் ஏற்கனவே தொடங்கிய இந்த அமைப்பை தற்போது தேசிய அளவில் எடுத்துச் செல்வதற்காக ’இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம்’ என்று மாற்றியிருக்கிறேன்.
எளியவர்களை பதவியில் அமர்த்துவதோடு, ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும், பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவதும் தான் எங்கள் கட்சியின் நோக்கம். இதற்காக இந்தியா முழுவதும் நாங்கள் பொறுப்பாளர்களை நியக்க உள்ளோம். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம். மற்றவர்கள் எங்களை பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதை பார்த்து பார்த்து பெரும் பசியில் இருக்கிறோம்.
அதனால் எங்களுடைய அரசியல் இனி தீவிரமாக இருக்கும். அதேபோல் தடாலடியான பதவிகளும் வழங்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து எங்களது நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். அந்த முடிவை விரைவில் நடைபெற உள்ள எங்கள் கட்சியின் மாநாட்டில் அறிவிப்போம். எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம்.
எங்கள் ஒரே நோக்கம் ஏழை, எளியவர்களுக்கு பதவியும், ஆட்சி அதிகாரமும் வழங்க வேண்டும் என்பதோடு, பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவதற்காக அவருடைய வழியிலும் தீவிரமாக பயணிக்க வேண்டும் என்பதுதான். சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை இந்தியா முழுவதும் நடத்த வேண்டும். சீமான் 2009ஆம் ஆண்டு கட்சி தொடங்கினார். நான் 1992ஆம் ஆண்டே அரசியலுக்கு வந்துவிட்டேன்.
1992இல் பாமகவில் பயணித்து அதன் பிறகு வெளியே வந்தேன். 1999இல் புதிய தமிழகம் சார்பாக எம்.பி. தேர்தலில் போட்டியிட்டேன். 2009இல் திருச்சியில் தனியாக நின்றேன். 2019இல் நாம் தமிழர் கட்சி மூலமாக போட்டியிட்டேன். 2024இல் நாங்கள் மிகப்பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ளோம். பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடுவோம்” என்று கூறியுள்ளார்.