திருமண அழைப்பிதழில் சிறிய திருத்தங்கள் இருப்பது சகஜம் தான். ஆனால் அர்த்தமே மாறும் அளவுக்கு மிகப்பெரிய மிஸ்டேக் நடந்துள்ளதை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு திருமண அழைப்பிதழின் புகைப்படம் தான் சமூக வலைதளத்தை வட்டமடித்து வருகிறது.
திருமணம் என்றாலே அங்காளி பங்காளி சண்டையில்லாமல் பெரும்பாலும் நடக்காது என்பார்கள். என் பெயரை போடலை, அவன் பெயருக்கு கீழே என் பெயரா, இந்த கல்யாணம் எப்படி நடக்குதுனு நானும் பார்க்கிறேன் என நிறைய பேர் ரவுசு விட்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால், ரவுசு விட்ட நபர்தான் திருமணத்தில் பம்பரம் போல் வேலை செய்து கொண்டிருப்பார். சில இடங்களில் பந்தியில் சாம்பார் சாப்பிட்டதும் பாயாசம் ஊற்றி விட்டார்கள் என சண்டை நடக்கும், முதல் பந்தியில் இருந்த லட்டு இந்த பந்தியில் ஏன் இப்படி இருக்கிறது? கடனை உடனை வாங்கி திருமணம் செய்தால் இப்படியெல்லாம் சிலர் பிரச்சனைகளை இழுத்து விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.
அதேபோல், திருமண அழைப்பிதழுக்கு தனிக்கவனம் செலுத்துவார்கள். திருமணத்திற்கு பிள்ளையார் சுழியே திருமண அழைப்பிதழ்கள்தான். அந்த திருமண அழைப்பிதழ்களில் நிறைய விதமான தவறுகளை நாம் பார்த்துள்ளோம். பிரிண்டிங்கில் திருமண அழைப்பிதழ் டிசைன் செய்து அதற்கு ப்ரூப் பார்க்க மணமக்கள் வீட்டாரிடம் நகல் கொடுக்கப்படும். அதை பார்த்து திருத்தம் இருந்தால் அதை திருத்த சொல்லிவிடுவர். இல்லாவிட்டால் அச்சடிக்க சொல்லிவிடுவார்கள். அந்த வகையில், ஒரு திருமண அழைப்பிதழில் உள்ள ஒரு மிஸ்டேக்கால் பெரிய குழப்பமே நடந்துள்ளது.
ஒருவர் தனக்கு தெரிந்தவர்களுக்கு திருமண பத்திரிகையை கொடுத்து அவசியம் குடும்பத்துடன் வந்துவிடுமாறு கூறியுள்ளார். அவர் போன பிறகு திருமண அழைப்பிதழை பார்த்தால் பயங்கர ஷாக்..! அதில் ”திருமணத்திற்கு அனைவரும் மறக்காமல் வாருங்கள்” என்பதற்கு பதிலாக ”திருமணத்திற்கு வருவதை மறந்துவிடுங்கள்” என அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த பத்திரிக்கை தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தவறை பிரிண்டிங் பிரஸ்தான் செய்துள்ளது. ஆனால் இதை ப்ரூப் பார்க்கும் போது மாற்றியிருக்கலாம். மணமக்கள் பெயர், திருமண தேதி, இடம், நேரம், அங்காளி பங்காளி பெயரை மட்டும் பார்த்துவிட்டு அப்படியே அச்சடிக்க கொடுத்துவிட்டனர். இதனால் இந்த பத்திரிக்கையை பார்த்துவிட்டு திருமணத்திற்கு வர சொல்கிறார்களா? இல்லை வேண்டாம் என்கிறார்களா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.