சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அசோக் செல்வன், பல நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், போர் தொழில், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு இணைந்து நடித்திருக்கும் தக் லைஃப் படத்திலும் அசோக் செல்வன் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையே, அசோக் செல்வன் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கஜானா என்கிற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய தயாரிப்பாளர் திருமலை, ”ஒரு படம் ஹிட் ஆச்சுன்னா இன்றைய ஹீரோக்கள் ரூ.50 லட்சம் கொடு, ரூ.1 கோடி கொடு, ரூ.5 கோடி கொடு என கேட்பார்கள். ஆனால், அசோக் செல்வன் ’எனக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்திற்கு முன்பு ரூ.10 கோடி கேட்டார். ஆனா, இப்ப அவருக்கு ரூ.1 கோடி தரவே ஆள் இல்ல. அவரை வைத்து யாரும் சமீப காலமாக படங்களை பண்ணவே முன் வருவதில்லை” என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அதேபோல், கஜானா படத்தின் விழாவில் பேசிய அப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா, “இந்த படத்தில் யோகி பாபு ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். அப்படி இருக்கும் போது, இந்த ப்ரோமோஷனுக்கு அவர் வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை. அவருக்கு ரூ.7 லட்சம் போய் இருந்தால், நிச்சயம் அவர் வந்திருப்பார். இது எவ்வளவு பெரிய கேவலமான விஷயம். ஒரு நடிகனுக்கு தான் நடித்த படம் குழந்தை போன்றது. ஒரு குழந்தையை வளர்க்கத் தெரியாதவன் நடிகனாக இருக்கவே தகுதி இல்லை. இதற்கு எல்லாம் காலம் கூடிய விரைவில் பதில் சொல்லும்” என்று கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.