நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் சாப்பாட்டு மெனுவில் சிறுதானிய உணவு வகைகளை சேர்த்து புதிய மெனுவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், எம்பிக்களுக்கு பரிமாறப்படும் உணவு தொடர்பான மெனுவை சபாநாயகர் மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேப்பை தோசை (ராகி தோசை), கேப்பை தட்டை இட்லி, சோளம் மற்றும் காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புமா, சிறுதானிய கிச்சடி, ராகி லட்டு, குதிரைவாலி வகை உணவுகள், ராகி பூரி மற்றும் கேசரி கீர் உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் புதிய உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மத்தியப்பிரதேசம், கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் தனித்த அடையாளம் உள்ள சிறுதாணிய உணவுகள் புதிய மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுகளை பிரபல ஐடிடிசி நிறுவனம் தயாரிக்கிறது. பிரணாப் முகர்ஜி மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் பணிக்காலத்தில் வேலை செய்த மொண்டு சைனி என்பவர் ஐடிடிசி சார்பில் இந்த உணவுகளை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 1968 முதல் நாடாளுமன்றத்தில் உணவினை தயாரித்து பரிமாறிக் கொண்டிருந்த வடக்கு ரயில்வே கேண்டீனின் பொறுப்பை 2020 நவம்பர் 15 அன்று இந்திய அரசு ITDC-க்கு ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.