உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் பண்டங்களுள் ஒன்று சாக்லேட் ஆகும். உங்கள் வயது, ஊர் எதுவாயினும், சின்னஞ்சிறிய சிறுவன் முதல் வயது முதிர்ந்த மூதாட்டி வரை சாக்லேட் மீதான விருப்பமானது வற்றுவதற்கான சாத்தியமே இன்றி என்றென்றும் நிலைபெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.
சாக்லேட், அதன் அற்புதமான சுவை மற்றும் சொக்க வைக்கும் மணம் ஆகியவற்றிற்காக மட்டுமே விரும்பப்படுவதில்லை. ஆரோக்கியமும், போஷாக்கும் நிறைந்திருப்பதாகக் கருதப்படுவதாலேயே பெரிதும் விரும்பப்படுகிறது. சாக்லேட்கள் வாலண்டைன்ஸ் டே, புத்தாண்டு, பண்டிகைகள் மற்றும் பிறந்தநாள் போன்ற பல்வேறு விசேஷ நிகழ்வுகளின் போது அன்பளிப்பாகவும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் உலகிலேயே, விலை உயர்ந்த சாக்லெட் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
டோக் சாக்லேட் உலகின் மிக விலையுயர்ந்த சாக்லேட் என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான சாக்லேட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஈக்வடாரில் தயாரிக்கப்படும் ஒரு உயர் ரக சாக்லேட் பிராண்ட் ஆகும். இந்த சாக்லேட் மிகவும் அரிதான மற்றும் மிகவும் மதிப்புமிக்க கோகோ பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த சாக்லேட் தயாரிப்பில் 100 சதவீதம் தூய கோகோ பீன்ஸ் பயன்படுத்தப்படுகிறது. அரிபா நக்கினோயல் பீன்ஸ் அவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சாக்லேட், ஒயின் மற்றும் விஸ்கியைப் போலவே, மர பீப்பாய்களில் சில ஆண்டுகள் பழமையாக்கப்படுகிறது. ஒவ்வொரு சாக்லேட் பட்டையும் மிகுந்த திறமையுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த சாக்லேட்டில் எந்த ரசாயனங்களோ அல்லது சர்க்கரையோ பயன்படுத்தப்படவில்லை. இந்த சாக்லேட் சிறப்பாக பேக் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சாக்லேட்டும் தங்கத்தால் பதிக்கப்பட்ட வடிவமைப்புடன் ஒரு சிறிய மரப் பெட்டியில் வழங்கப்படுகிறது. இந்த சாக்லேட்டின் விலை உங்களுக்குத் தெரிந்தால், ஆச்சரியப்படுவீங்க. 50 கிராம் சாக்லேட்டின் விலை சுமார் ரூ. 60,000 வரை இருக்குமாம்.
இந்த சாக்லேட்டுகள் ஓக், ஒயின் மற்றும் ஸ்காட்ச் பீப்பாய்களில் பழமையாக்கப்பட்டு, அவற்றுக்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கின்றன. வருடத்திற்கு சில நூறு சாக்லேட் பார்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இதனால் இதன் விலை அதிகம். பிரீமியம் தொகுப்பு ஆடம்பர தோற்றத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது.