ஆந்திராவில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த புலியின் கறியை பங்குபோட கிராம மக்கள் சண்டையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஆக்கப்பள்ளி கிராமத்தில் அடிக்கடி யானை, காட்டுப்பன்றி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் வந்து விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசமாக்கி விடுவதாக கூறப்படுகிறது. இதனால் வனவிலங்குகளில் இருந்து பயிர்களை காப்பாற்ற அந்த கிராம மக்கள் சட்டத்துக்கு புறம்பாக மின்வேலிகளை அமைத்துள்ளனர்.
இந்த மின்வேலிகளில் சிக்கி கடந்த காலங்களில் பல வனவிலங்குகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் அந்த கிராமத்தில் உள்ள மின் வேலிகளை அகற்றினர். இருந்தபோதிலும், கிராம மக்கள், சாதாரண வேலிக்கு பின்புறம் மின் வேலிகளை அமைத்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மின்வேலிகளை கண்காணிப்பதற்காக வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு கேமராக்களை வைத்துள்ளனர்.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியை கடக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பெண் புலி உயிரிழந்துள்ளது. இதையடுத்து, அந்த கிராம மக்கள் புலியை கறியை பங்குப்போட்டு சமைத்து சாப்பிட்டுள்ளனர். மேலும், கறியை பங்கு போடுவதில் சண்டையும் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, புலியின் நகங்கள் மற்றும் பல்லை எடுப்பதில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதையடுத்து, இந்த விஷயம் வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும், புலி இறைச்சியை சமைத்தவர்கள் அதன் தோலை அருகில் உள்ள கிணற்றில் வீசியதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், புலி கறியை சாப்பிட்டதாக சிலரை சந்தேகத்தின் பேரில் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.