உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அருகே பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் வீட்டு மனை ஒன்றை வாங்கியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, ராமர் பிறந்த இடம் என நம்பப்படும் அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிந்து வரும் 22-ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு கோலாகலமான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சொந்தமாக வீட்டு மனை ஒன்றை வாங்கியுள்ளார். அயோத்தியின் சராயு பகுதியில் இந்த வீட்டு மனை அமைந்து இருக்கிறது. ராமர் கோயிலில் இருந்து வெறும் 15 நிமிட தொலைவிலும் விமான நிலையத்தில் இருந்து அரைமணி நேர தொலைவிலும் அமிதாப் பச்சன் வாங்கியிருக்கும் வீட்டு மனை அமைந்துள்ளது. 10 ஆயிரம் சதுர அடியில் வாங்கியிருக்கும் அந்த வீட்டுமனையின் மதிப்பு ரூ.14.5 கோடி இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
மும்பையைச் சேர்ந்த வீட்டு மேம்பாட்டு நிறுவனமான ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோத்தா (The House of Abhinandan Lodha – HoABL) நிறுவனம் அயோத்தி ராமர் கோவிலுக்கு அருகே 51 ஏக்கர் பரப்பளவில் வீட்டு மனை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த இடத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுடன் மிகப் பிரம்மாண்டமான வீடுகள் கட்டப்பட உள்ளன. வருகிற 2028 ஆம் ஆண்டுக்குள் இவை முடிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமிதாப் பச்சன் அளித்துள்ள நேர்காணலில், “அயோத்தி காலத்தால் அழியாத ஆன்மிகம் மற்றும் கலாச்சார பெருமைகளைக் கொண்டது. அயோத்தியில் உள்ள சராயு, என் மனதுக்குப் பிடித்த நகரங்களில் ஒன்று. இங்கு, எனது வீட்டைக் கட்டுவதற்கு நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அபிநந்தன் லோதா நிறுவனத்துடன் இந்தப் பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.