15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
2070ஆம் ஆண்டிற்குள் கார்பன் வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை எட்டுவதை இலக்காகக் கொண்டு, புதிய திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்காக பழமையான வாகன அழிப்புக் கொள்கையை பிரதமர் மோடி கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். அதன்படி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இதன்மூலம், அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும். அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எத்தனால், மெத்தனால் மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.