சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசியுள்ளார். பெட்ரோல் குண்டு வெடித்ததால், அங்கு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய நபரை ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் அதிகாரிகள் விரட்டி பிடித்து கிண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத் என்பதும் ஏற்கெனவே பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இதே போன்று பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தாம் ஓராண்டாக சிறையில் இருந்ததாகவும், தனது விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் தர தாமதித்ததால், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாகவும் கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.