‘மனைவியின் தனி உரிமையில் தலையிட கணவருக்கு அதிகாரம் இல்லை’ என்று அக்டோபர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2003இல் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். இந்நிலையில், தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019இல் விவாகரத்து கோரி கணவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மனுவில், மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக கூறி, அதற்கான ஆதாரமாக மனைவியின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புப் பட்டியலைச் சமர்ப்பித்திருந்தார். இந்த ஆவணங்களை நிராகரிக்குமாறு பரமக்குடி நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார். ஆனால், அதை ஏற்க கோர்ட் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், அக்டோபர் 30ஆம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.
அந்த தீர்ப்பில், ‘தனியுரிமை என்பது அடிப்படை உரிமை. இந்த உரிமையை மற்றொருவர் ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது. தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுவதன் மூலம் பெறப்பட்ட சாட்சியங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில், கணவர் தரப்பில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது.
“இந்திய சாட்சியங்கள் சட்டம் 1872-இன்படி இந்த வழக்கை நடத்தாமல் ஜூலை 1, 2024 அன்று அமலுக்கு வந்த பி.எஸ்.ஏ (Bharatiya Sakshya Adhiniyam) சட்டப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்புவதாக தெரிவித்தார். எந்த நபர் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளதோ, அந்த நபரின் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும் என புதிய சட்டப்பிரிவு கூறுவதாக நீதிபதி தெரிவித்தார்..
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலர் அளித்த அறிக்கையில், தமிழ்நாட்டில் அத்தகைய நிபுணர் என ஒருவர் கூட இல்லை எனக் கூறுவது ஆச்சர்யமளிப்பதாக தெரிவித்தார். மேலும், இது ஒருவர் நீதியைப் பெறுவதற்கான நம்பிக்கையை இழக்க வைக்கிறது. மேலும், 3 மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் போதிய நிபுணர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அடுத்து, மனைவியின் தனி உரிமை குறித்துக் குறிப்பிட்டுள்ள நீதிபதி, “மனைவி தொடர்பான தரவுகளை கணவர் திருட்டுத்தனமாக எடுத்திருக்கிறார். அந்த செல்போன் மற்றும் சிம்கார்டின் உரிமையாளர் கணவர் இல்லை. கணவன், மனைவியாக இருந்தாலும் அவர்களுக்கான தனி உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். தனி உரிமையை மீறுவதன் மூலம் பெறப்பட்ட சான்றுகளுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை” என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.