அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “வரும் 2022 ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும், 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளுப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைவரும் சமூக வலைதள ஊடகங்களில் முகப்பு படமாக தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அத்துடன் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றும்படி பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதன் காரணமாக தபால் நிலையங்கள் மூலமாகவும் தேசியக்கொடி விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது.