நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதிக சம்பளத்திற்கோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ அடுத்த நிறுவனத்திற்கு செல்லும்போது, தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தில் நோட்டீஸ் பீரியட் முடித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது விதியாகும். இது பெரும்பாலான நிறுவனங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, நோட்டீஸ் பீரியட் என்பது 15 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை இருக்கும். இந்த நோட்டீஸ் பீரியட் முடியும் வரை நீங்கள் வேலை செய்தாக வேண்டும். இது ஒவ்வொரு நிறுவனத்தை பொறுத்து மாறுபடும். இந்நிலையில் தான், 90 நாட்கள் கட்டாயம் நோட்டீஸ் பீரியடில் இருக்க வேண்டும் என்று ஒரு நிறுவனம் வற்புறுத்தியதால், மன அழுத்தம் காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரெடிட் சமூக வலைத்தள பயனர் ஒருவர், தனது சக ஊழியருக்கு நடந்த கொடுமை குறித்து விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், “தற்கொலை செய்து கொண்ட ஊழியர், வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டுள்ளார். கடுமையான பொருளாதார அழுத்தம் காரணமாக பெற்றோர்களையும், தன்னையும் காப்பாற்ற வேண்டிய சூழலில் அவர் இருந்தார். அவருக்கு வேலை கிடைத்ததும் நிம்மதியாக இருந்தார்.
ஆனால், வீட்டு வாடகை தர முடியாமலும், கிரெடிட் கார்டு கடனிலும் சிக்கிக் கொண்டார். அவர் கடுமையாக உழைத்தபோதும், போதுமான வருமானம் அவருக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையே, அவருக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனம் “90 நாட்கள் கண்டிப்பாக நோட்டீஸ் பீரியடில் வேலை செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்தால் மட்டுமே ரிலீவ் செய்வோம்” என்றும் கூறியது.
ஊழியரிடம் உயரதிகாரிகள் மனிதாபிமானமின்றி அவரிடம் நடந்து கொண்டனர். இதனால், கடும் மன அழுத்தத்திற்கு ஆளான அவர், தற்கொலை செய்து கொண்டார். “இந்த பாவம் சும்மா விடாது” என்று அவர் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே, நோட்டீஸ் பீரியட் குறித்த விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என்றும் அனைத்து நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தை மட்டுமே நோட்டீஸ் பீரியடுக்கு பின்பற்ற வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.