தமிழில் ரஜினி, கமல், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை மீனா. தற்போது தனது வயதுக்கேற்றாற் போன்ற கதாபாத்திரங்களிலும் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான், மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவானார். இவரது மறைவுக்கு புறா எச்சம் காரணமாக சொல்லப்பட்டது. மீனாவின் கணவர் மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சிறுவயதிலேயே மீனாவின் கணவர் இறந்துவிட்டார் எனப் பலரும் மீனாவுக்கு ஆறுதல் கூறினர். கணவர் மறைவுக்குப் பின் மீனாவின் நட்பு வட்டாரம் அவருக்கு ஆறுதலாக இருந்தது. மீனாவும் மெல்ல மெல்ல தனது கணவர் மறைவு தந்த சோகத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். இதுபோன்ற நிலையில்தான், மீனா மறுமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து மீனா மறுத்த போதும், தொடர்ந்து இந்த செய்தி அவரைத் துரத்திய வண்ணமே உள்ளது. இதற்குத்தான் மீனா இப்போது பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ”என்னுடைய கணவர் இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று வரை அவரது இறப்பை ஈடு செய்ய முடியவில்லை. ஆனால், அதற்குள் மறுமணம் குறித்த பேச்சு வந்திருக்கிறது. ஒரு ஹீரோ தனியாக இருந்தால் அவர் குறித்து இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதில்லை. இதுவே, ஒரு ஹீரோயின் தனியாக இருந்தால் இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து வெளியாகிறது. ஹீரோயின் என்றில்லை. பொதுவாக, பெண்கள்தான் இதுபோன்ற வேதனைகளை எதிர்கொள்கின்றனர். இது என்னை மட்டுமின்றி, என்னுடைய குடும்பத்தினரையும் பாதிக்கிறது. இப்போதுவரை, என்னுடைய மறுமணம் குறித்து நான் யோசிக்கவில்லை” என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.