’எங்களிடம் அதிகாரம் இருந்தால் ஒரு மாதத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்துவோம்’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசியக் கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். தேசிய கல்விக் கொள்கையில் நல்லதும் உள்ளது. மாநிலத்திற்கு பாதகமும் உள்ளது. இந்திரா காந்தி எமர்ஜென்சி காலகட்டத்தில் கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு எடுத்துச் சென்றதால் தான் இப்பிரச்னையே வந்தது.
மத்திய அரசு கல்விக் கொள்கையை திணிக்க கூடாது. ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதியை தர மாட்டோம் என கூறக் கூடாது. திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் போதைப் பொருட்கள் சுமார் 5 மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. காவல்துறைக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது. இதுகுறித்து முதல்வரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், அவர் ஏதோ பெயருக்கென ஒரு கூட்டத்தைக் கூட்டி எதையோ படித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறிவிடுகிறார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு வெளியிலேயே போதைப் பொருட்கள் கிடைக்கின்றன. 2 தலைமுறையினரை இதற்கு அடிமையாகி நாசம் ஆக்கிவிட்டனர். அடுத்த தலைமுறையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் தான் அதிகமாக அடிமையாகி வருகின்றனர். ஒரே நாளில் அதிக கொலைகள் நடப்பதற்கு போதைப் பொருட்கள்தான் காரணம். எங்களிடம் அதிகாரம் இருந்தால் ஒரு மாதத்தில் இதனை கட்டுப்படுத்த முடியும். பத்து அல்லது ஐந்து காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தால் போதும். அப்போதுதான் பயம் வரும்” என்றார்.
Read More : திடீர் திருப்பம்..!! என்னிடம் அவர் எதுவுமே சொல்லவில்லை..!! ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பரபரப்பு அறிக்கை..!!