மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்த விஜயகாந்த், 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, தனது தந்தையின் அரிசி ஆலையை கவனித்து வந்தார். இவருக்கு சினிமா மீது ஈர்ப்பு இருந்ததால், வாய்ப்பு தேடி சென்னை வந்தார். விஜயகாந்த் 1979ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்தார்.
இவரது படங்களில் தேசப்பற்று வசனங்கள் மிகவும் அழுத்தமாக இருக்கும். ஊழல், திருட்டு என சட்டவிரோத செயல்களுக்கு எதிராக இவரின் குரல் திரைப்படங்களிலும், சமூகத்திலும் தொடர்ந்து ஒலிக்கும். பெரும்பாலும், இரட்டை வேடம், போலீஸ் மற்றும் ராணுவ வீரர் போன்ற வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ரமணா படத்தில் ஊழல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் நடித்திருப்பார்.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. பலரும் விஜயகாந்தை நினைவுகூர்ந்து கதறி அழுது வரும் நிலையில், அவரின் நிறைவேறாமல் போன ஆசைகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு வீடு கட்ட ஆசைப்பட்டாராம். இதற்காக சுமார் 20 ஆயிரம் சதுர அடி இடத்தை விலைக்கு வாங்கி பூஜையும் போட்டு, வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால், இடையே கொஞ்சம் பொருளாதாரச் சிக்கல்கள் வந்ததால், வீடு கட்டும் பணி சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. 10 ஆண்டுகளாக தான் ஆசையாக கட்டிய வீட்டில் குடும்பத்துடன் வாழ வேண்டும் என நினைத்த விஜயகாந்த்தின் ஆசை கடைசி வரை நடக்காமலே போய்விட்டது. இந்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களையும், கட்சித் தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.