01.01.2000-க்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயருடன் பிறப்பு சான்று பெற 2024 டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தையின் பிறப்பை பதிவு செய்வதும், பிறப்பு சான்றிதழ் வழங்குவதும் அக்குழந்தையின் தோற்றத்தை (பிறப்பை) சட்டப்படி ஏற்றுக்கொள்ளும் முதல் நடவடிக்கையாகும். அதாவது, ஒரு குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பதிவாளரிடம் அளித்து கட்டணம் இன்றி பெயர் பதிவு செய்யலாம்.
12 மாதங்களுக்குப் பின் 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி பெயரினை பதிவு செய்யலாம். ஆனால், 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய முடியாது. மேலும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அச்சான்றானது முழுமை பெறும். பிறப்புக்களை பதிவு செய்வது ஒரு தனிநபரின் அடையாள ஆதாரமாக விளங்குவதுடன், அவர் எந்த இடத்தைச் சார்ந்திருக்கிறாரோ, அந்த இடத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பதற்கான முக்கியமான அடிப்படைத் தகவல்களையும் அளிக்கிறது.
இந்நிலையில், இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவுரைப்படி,
01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, குழந்தையின் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால், பிறப்பு பதிவு சான்று வழங்கிய அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று. ஆதார் நகல், பெயர் பதிவு செய்யப்படாத பிறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்க முடியாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்று பயன்பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கு தெரியுமா..? அட இந்த இடத்துக்கு அவ்வளவு பவர் இருக்கே..!!