திமுக மீது புகார் தெரிவிப்பவர்கள் முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது, நிர்வாகத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடி ஊழல் நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடர்ந்தோம். அரசு பொறுப்பில் உள்ளவர்கள் அவருடைய உறவினர்களுக்கு வழங்கக் கூடாது என்ற விதி உள்ளது.

ஆனால் எடப்பாடி பழனிசாமியின் 2 உறவினர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் இன்று சிபிஐ விசாரணைக்கு தடை பெறப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. உச்சநீதிமன்றத்தில் எங்கள் வாதம் ஏற்கப்பட்டுள்ளது. திமுக யார் மீதும் பொய் வழக்கு போடுவதில்லை. நியாயமாக வழக்கு நடத்தி வெல்வோம். நாங்கள் கேட்பது உண்மையான விசாரணை மட்டுமே, சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.

தற்போது எடப்பாடி பழனிசாமி வழக்கு வந்துள்ளது. அடுத்து எஸ்.பி.வேலுமணி வழக்கு வர இருக்கிறது. அடுத்தது கொடநாடு போன்ற வழக்குகள் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நான் எந்த வழக்கையும் தொடுக்கவில்லை. இந்த வழக்கு திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தொடர்ந்தது. சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வழக்கை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நியாயமான விசாரணை நடைபெற்று நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக மீது புகார் தெரிவிப்பவர்களுக்கு சாவல் விடுகிறேன், முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.