அரசுப் பள்ளியில் ஏழை, எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று சொல்லும் அனைவருமே மும்மொழி பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன் தொடர்பில் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், தமிழ்நாட்டிற்கு நிதியுதவி வழங்கப்படுமென மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில், இதற்கு தமிழக அரசியல் தலைவரகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான், புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு, நிவாரண நிதியில் இருந்து தமிழகம் புறக்கணிப்பு உள்ளிட்ட விவகாரங்களை கையிலெடுத்து, சென்னையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “மும்மொழி திட்டத்தை அவர்கள் திணிப்பதற்கு என்ன காரணம் இந்தியா முழுவதும் ஒரே மொழியை பேசுகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான். நீ எந்த தாய்மொழியை பேசினாலும், இந்தியையும் பேச வேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள். திராவிட இயக்கங்கள் மற்றும் திமுக தலைமையிலான கூட்டணிகள் இருக்கும் வரை அது நடக்காது. என்ன முயற்சி செய்தாலும், தமிழ்நாட்டில் உங்களால் காலூன்ற முடியாது” என்று பேசினார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் மத்தியில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School பள்ளியின் நிர்வாகக் குழு தலைவரே திருமாவளவன் தான்.
மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே ஏதோறு வகையில், மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல் முன்னதாக மும்மொழிக் கொள்கைக்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ‘ விஜய் வித்யாஸ்ரம் ‘ எனும் பெயரில் சிபிஎஸ்இ பள்ளியை நடத்தி வருகிறார். அந்த பள்ளியின் ஆவணங்களில் சி.ஜோசப் விஜய் என்ற பெயர் உள்ளது” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.