கனடா நாட்டின் மேற்கு எல்லையில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் உள்ளது. இது நீளமான நதிகளையும், பெரிய மரங்களையும் கொண்ட பகுதியாகும். இந்த பகுதியில் திடீரென்று 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீ பற்றி எரியத் தொடங்கியது. தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இதன் காரணமாக இந்த பகுதி முழுவதும் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 36,000 பேர் வசிக்கும் மேற்கு கெலோனா நகரம் முழுவதும் தீ பரவத் தொடங்கியது.
இதையடுத்து, இந்த பகுதியில் இருக்கும் 2,400 வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளது. இதனைப் போலவே, எல்லோஃநைப் பகுதியில் காட்டுத்தீ மளமளவென பரவத் தொடங்கியுள்ளது. மேலும், அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் கார், விமானம் மூலமாக ஊரை காலி செய்து வருகின்றனர். காட்டுத் தீ பரவும் நகரில் வசித்து வந்த 20,000 பேரில் 19,000 பேர் ஊரை விட்டு வெளியேறியுள்ளனர். மீதம் இருப்பவர்களில் உதவிக்குழுவை தவிர மற்ற அனைவரும் வெளியேறுமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் ஷேன் தாம்ப்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.