பெங்களூரில் முன்னாள் காதலியின் மிரட்டலுக்கு பயந்து திருமணத்துக்கு மறுநாளே தன் மனைவியை நடுரோட்டில் விட்டுவிட்டு இளைஞர் ஓடிப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணியைச் சேர்ந்த இளைஞரை தனது முன்னாள் காதலி, தாங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட அந்தரங்கப் படங்களை பகிரங்கமாக வெளியிடுவதாக மிரட்டியதால் மன உளைச்சல் இருந்தார் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற திருமணத்திற்குப் பிறகு, ஜார்ஜ் தனது முன்னாள் காதலியால் அச்சுறுத்தப்படுவது பற்றி மனைவியிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது மனைவி, தானும் தன் பெற்றோரும் அவருக்கு உறுதுணையாக நிற்பதாகவும், கவலைப்பட வேண்டியதில்லை எனவும் உறுதி அளித்துள்ளார். மறுநாள் இருவரும் காரில் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு திரும்பியக்கொண்டிருந்தனர். அப்போது, போக்குவரத்து நெரிசலால் பை லேஅவுட் அருகே அவர்கள் சென்ற கார் சுமார் 10 நிமிடம் நின்றது. காரின் முன் இருக்கையில் இருந்த ஜார்ஜ் திடீரென காரில் இருந்து வெளியேறி ஓடிப்போய்விட்டார்.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவியும் காரை விட்டு இறங்கி கணவரைத் துரத்திக்கொண்டு ஓடினார். ஆனால் அவரைப் பிடிக்க முடியவில்லை. கர்நாடகா மற்றும் கோவாவில் மனிதவள நிறுவனம் ஒன்றை நடத்தும் தந்தைக்கு உதவியாக இருந்துவந்தார் ஜார்ஜ். கோவாவில் இருந்தபோது, அவர்களுடைய நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்தவரின் மனைவியுடன் ஜார்ஜுக்கு தொடர்பு வைத்திருந்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண்ணும் அதே நிறுவனத்தில் கிளார்க் வேலை பார்த்துவந்தவர் என்று கூறப்படுகிறது. ஒருநாள் இந்த விவகாரம் ஜார்ஜின் அம்மாவுக்குத் தெரிந்துவிட்டது. இதனால் ஜார்ஜ் அந்தப் பெண்ணுடனான உறவை முறித்துக்கொள்வதாக தாயிடம் உறுதி அளித்தார். ஆனால் தொடர்ந்து ரகசியமாக அந்தப் பெண்ணுடன் பழகிவந்துள்ளார். இதனிடையே ஜார்ஜின் குடும்பத்தினர் அவருக்கு வேறு இடத்தில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
“திருமணத்திற்கு முன்பே இந்த விவகாரம் பற்றி எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்தப் பெண்ணுடன் உள்ள தொடர்பை விட்டுவிடுவதாக வாக்களித்தார். அதனால் அவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டேன்” என்று ஜார்ஜின் மனைவி கூறுகிறார். “அந்தப் பெண்ணின் பிளாக்மெயிலுக்குப் பயந்துதான் ஜார்ஜ் ஓடிவிட்டார். அவருக்கு தற்கொலை செய்யும் எண்ணமும் இருந்தது போலத் தோன்றுகிறது. அவர் பாதுகாப்பாக இருப்பார் என்றும் விரைவில் என்னிடம் திரும்புவார் என்று நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்